Sunday 23 April 2023

அகழ் – ஏப்ரல் இதழ்

அகழ் ஏப்ரல் இதழ் வெளியாகிவிட்டது. பிப்ரவரி, மார்ச் இரண்டு மாத வெளியீடுகளிலும் பங்களிப்பாற்றியிருந்தாலும் இந்த இதழுடனே அதிகாரபூர்வமாக “அகழ்”-இல் ஆலோசகராக இணைகிறேன். பொதுவாக சிற்றிதழ் என்பது நண்பர்களால் நடத்தப்படுவது. சூழலின் தேவைகளாலும் எதிர்வினைகளாலும் வடிவமைக்கப்படுவது. எனவே எல்லோருடைய ஆலோசனைகளும் முக்கியம். “அகழ்” இதழாசிரியர்களில் ஒருவரான அனோஜனுடனான நட்பின் காரணமாக எனக்கு சற்று கூடுதல் உரிமை கிடைத்திருக்கிறது. இதழின் வடிவம் மற்றும் வெளிப்பாடு சார்ந்த பொதுவான திட்டமிடல்களில் நானும் பங்களிப்பாற்றுகிறேன். முக்கியமாக கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளில் தேர்வுகளை முன்வைக்கிறேன். 

O



இவ்விதழில் புகைப்பட கலைஞரும் நண்பருமான ஏ.வி.மணிகண்டன் “வெற்றுவெளியின் தோரணவாயில்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காண்பியல் கலை சார்ந்து மணி “அகழ்” இதழில் எழுதும் மூன்றாவது கட்டுரை இது. புகைப்படம் பற்றிய பொது முடிவுகளை கேள்விக்குட்படுத்துபடும்படியும் கீழை நாட்டு தத்துவ பின்புலத்தில் புகைப்படக் கலையை ஆராயும்படியும் அவர் கட்டுரைகள் அமைந்துள்ளன. புகைப்படமும் கவிதையும் ஒன்றுக்கொன்று நெருக்கமான கலை வடிவங்கள் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார். அவ்விரண்டு கலை வடிவங்களுக்குமே வெளியே இருந்து சட்டகத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அச்சட்டகம் புகைப்படமோ கவிதையோ ஆகாது. அதை இக்கட்டுரையில் மேலும் விரிவாக பேசியிருக்கிறார் மணி. 

“ததாகதா என்பது ஒன்றை சுட்டும் விரல் மட்டுமே. அது சுட்டும் பொருளோடு சேர்த்து ஒட்டப்பட்டிருக்கிறது. உற்று நோக்கும் தருணத்தில் நாம் காண்பது சுட்டப்படுவதையே. சுட்டும் விரலை அல்ல”. 

O

அழகிய மணவாளன் கதகளியை மையமாக வைத்து “மாய கொந்தளிப்பு” என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். நிகழ்த்துக் கலை சார்ந்து அதிகம் கட்டுரைகள் இல்லாத சூழலில் மணவாளனின் எழுத்து ஒரு நல்வரவு. கலை விமர்சனத்தில் சமூக வரலாற்று பின்னனியோ அல்லது அழகியல் பின்னனியோ இருக்க வேண்டியது அவசியம். கூடவே தனிப்பட்ட ரசனையும் இருக்க வேண்டும். வெறுமனே பின்னனி மட்டும் இருக்கும்போது அது வறட்டுத்தனமாக மாறிவிடலாம். பரிசீலணையில்லாத தனிப்பட்ட ரசனையோ வெற்று சுய-விழைவாக தொனிக்கலாம். மணவாளனின் கட்டுரையில் இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலை அமைந்துள்ளது. 

O

டெர்ரி ஈகிள்டனின் பேட்டியும், “இலக்கியம் என்றால் என்ன?” எனும் கட்டுரையும் பிரசுரமாகியுள்ளன. கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். டெர்ரி ஈகிள்டன் எனக்கு மிக விருப்பமான ஓர் ஆளுமை. என் இருபதுகளின் தொடக்கத்தில் இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்து எனக்கு ஆர்வம் உருவானது. கவிஞர் சபரிநாதனிடம் அப்போது அது பற்றிய பேசியபோது டெர்ரி ஈகிள்டனின் “இலக்கிய கோட்பாடு: ஓர் அறிமுகம்” நூலை பரிந்துரைத்தார். உடனே அதை வாசித்தேன். அந்நூல் எனக்கு பெரிய அளவில் உதவியது. 

இலக்கிய கோட்பாடுகள் சார்ந்து நம் சூழலில் இருவகை பார்வைகள் உள்ளன. அவை பயனில்லாதவை என்பதோடு படைப்பிலக்கியத்துக்கே எதிரானவை என்பது ஒரு பார்வை. அவை சர்வயோக நிவாரணிகள் என்பது இன்னொரு பார்வை. இரண்டுமே முன்முடிவுகள் கொண்டவை. ஓர் அப்பாவித்தனமான “தூய” உலகை கற்பனை செய்வது, படைப்பிலக்கியவாதிகளை எல்லைக்குள் அடக்கும். ஒரு புனைவாசிரியனாக உண்மைக்கு நெருக்கத்தில் இருக்கவே நான் விரும்புகிறேன். கற்பிதங்களை கலைய முற்படுகிறேன். அதே நேரம்,  படைப்பிலக்கியவாதிகளுக்கு எதிரான கோட்பாட்டாளர்களின் தந்திரங்களும் கண்டனத்திற்குரியவை. இந்நிலையில் இரண்டுக்கும் நடுவே சமநிலையோடு ஓர் எழுத்தாளன் இயங்க, டெர்ரி ஈகிள்டன் போன்ற ஆளுமைகள் உதவுகிறார்கள்.  

சமகாலத்தின் முக்கியமான பொது அறிவுஜீவிகளில் ஒருவரான, டெர்ரி ஈகிள்டன் ஒரு மார்க்ஸியர். அதனாலேயே அவருடைய எழுத்து யதார்த்தத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும். எந்த கருத்தியல் தரப்பு பற்றி பேசினாலும் சமூக அரசியல் காரணிகள் மேல் எப்போதும் பிடிமானம் கொண்டிருக்கும்.  பொதுவாக கலாச்சார கோட்பாட்டாளர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் - அவர்கள் மூட்டமான மொழியில் எழுதுகிறார்கள் என்பதே. ஈகிள்டனின் எழுத்துக்கள் மேல் அக்குற்றச்சாட்டை வைக்க முடியாது. அழகும் நகைச்சுவையும் கலந்த தெளிவான நடை அவருடையது. அதே நேரம் எளிமையின் பொருட்டு தீவிரத்தை அவர் கைவிடுவதில்லை.  நவமார்க்ஸியர்கள் எல்லோருமே பின்-நவீனத்துவத்தின்மேல் கடும் விமர்சனம் உடையவர்கள். டெர்ரி ஈகிள்டனும் அப்படியே. 

இலக்கியம் பற்றிய டெர்ரி ஈகிள்டனின் எல்லா கருத்துக்களோடும் எனக்கு உடன்பாடில்லை. நான் மொழிபெயர்த்திருக்கும் இக்கட்டுரையிலேயே "இலக்கியம் என்று ஒன்றில்லை" என அவர் வாதாடுகிறார். நான் அதை ஏற்றுக் கொண்டால் எழுதுவதையே நிறுத்திவிட வேண்டும். அப்படி ஒரு முடிவு எடுக்க எனக்கு எந்த திட்டமும் இல்லை. ஆனால் “இலக்கியம் என்றால் என்ன?” எனும் கேள்விக்கு என் வரையில் ஒரு பதிலை தேடுவதற்கான கட்டாயத்தை பல வருடங்களுக்கு முன்னால் இக்கட்டுரை ஏற்படுத்தியது. அப்பதிலை கண்டுகொள்ளவும் செய்தேன் என்பதற்காகவே டெர்ரி ஈகிள்டனுக்கு நன்றி சொல்ல வேண்டும். சுயவிசாரனையையே அவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார். அதை எப்போதும் பின்பற்ற விரும்புகிறேன்.

O

“அர்த்த மண்டபம்” என்று ஒரு புதிய பகுதி “அகழ்” இதழில் தொடங்கப்பட்டுள்ளது. பல ஆங்கில இணைய இதழ்களில், எழுத்தாளர்களின் குரல்கள் கேட்க கிடைக்கின்றன. கட்டுரைகள், கவிதைகள், கதைகள் முதலியவற்றை எழுத்தாள்ர்களின் குரல்களில் பதிவேற்றுகிறார்கள். அதை “அகழ்” இதழிலும் செய்யலாம் என்று அனோஜனிடம் கூறினேன். அவர் தொடர்ந்து முன்னெடுத்ததில் “அர்த்த மண்டபம்” உருவானது. கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தலைப்பை பரிந்துரைத்தார். தலையங்கத்தில் இருந்து குறிப்பு,

“இந்த இதழிலில் இருந்து ‘அர்த்தமண்டபம்’ என்று ஒரு புதிய பகுதி தொடங்கப்படுகிறது. வெவ்வேறு எழுத்தாளர்களை அவர்களுக்கு விருப்பமான கவிதைகளை வாசிக்கச் சொல்லி, பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம். அக்குரல்பதிவை “அகழ்” இதழில் உள்ள ஒலிப்பானில் கேட்கலாம். மின்னிதழ் என்பதால் தொழில்நுட்ப சாத்தியங்களையும் பரிசீலித்து பார்க்கும் விழைவில் இதை தொடங்கியிருக்கிறோம்.”

"அர்த்த மண்டபம்"

O

கடந்த மூன்று “அகழ்” இதழ்களிலும் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதி வந்தேன். இம்முறை அது தவறிவிட்டது. அடுத்த இதழில் அதை நிகர் செய்துவிட வேண்டும்.


Tuesday 4 April 2023

திருவருட்செல்வி (சிறுகதை)

அலுவலகம் முடிந்து, ஹாஸ்டலுக்கு வந்த செல்வி, வேகவேகமாக நடந்தாள். அவள் முதுகுப்பை தனியே துள்ளி ஓடுவது போல நெளிந்தது. எதிர் திசையில் இழுத்தது. மூச்சிரைப்பு போல ஒரு குரல் தொடர, கீழ்த்தளத்தில் மாடிப்படியை ஒட்டியிருந்த தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினாள். ஹெட்போனை காதுகளிலிருந்து அகற்றிவிட்டு, முதுகுப் பையைக் கழற்றி மேஜையில் வைத்தாள். ஜிப்பைத் திறந்து உள்ளிருக்கும் பூனையைத் தன் மெலிந்த கைகளால் தூக்கி தரையில் விட்டாள். ஆரஞ்சு நிறக் கோடுகள் கொண்ட பூனை தலையை உலுக்கியது. பின்னர் குட்டி உறுமலோடு உடலை அசைத்துவிட்டு, செல்வியை சட்டை செய்யாது, புதிய இடம் பற்றியும் எந்த தயக்கமும் இல்லாமல் வாலை நிமிர்த்தி நேரே நடை போட்டது. 

தொடர்ந்து படிக்க:https://akazhonline.com/?p=4311

நிழலின் அசைவு (நெடுங்கதை)

 ஒவ்வொரு வீடாகவும் ஒவ்வொரு உடலாகவும் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த வேளையில், பெங்களூர் நகர் முழுக்க ஆளில்லாத ஏரிகளிலும், பூங்காங்களிலும், உயரமான கண்ணாடி கட்டிடங்களிலும் வினோத அமைதி படிந்திருந்தது. ஊரடங்கி மனித நடமாட்டமே இல்லை. மனிதர்களில்லாத சாலைகளையும் மேம்பாலங்களையும் பார்த்து நாய்கள் குரைக்க, போலீஸ் வாகனங்கள் எல்லா பகுதிகளிலும் ரோந்து போய்க் கொண்டிருந்தன.

தொடர்ந்து படிக்க: https://akazhonline.com/?p=4219

கிரேஸ் இல்லம் (சிறுகதை)

ஜான் என்று குடும்பத்தினராலும் ஹெலன் மிஸ் வீட்டுக்காரர் என்று அந்த சுற்று வட்டத்திலும் அழைக்கப்படுகிற திரு.ஜான்சன் தேவராஜ், இன்னும் இரண்டு தினங்களில் காலி செய்ய போகும் “கிரேஸ் இல்லம்” எனும் தங்கள் பழைய வீட்டின் முன் வாசலில் – நாற்காலி, தொலைக்காட்சி மேஜை, துருவேறிய சைக்கிள் என்று அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களின் நடுவே நின்று – “த்சு.த்சு” என குரல் கொடுத்து பவுல் எனும் தவிட்டு நிற வளர்ப்பு நாயை தேடினார். 

தொடர்ந்து படிக்க : https://akazhonline.com/?p=4056