2023ம் வருடத்தின் சாகித்திய அகாடெமி விருது "நீர்வழி படூஉம்" நாவலுக்காக தேவிபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாவல் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் தேவிபாரதி மேல் மதிப்பு கொண்டவன் என்கிற முறையில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழில் தேவிபாரதி,ஜீ.முருகன்,லஷ்மி மணிவண்ணன் என்று காஃப்காவிய கூறுகளை வெவ்வேறு அளவுகளில் வெளிப்படுத்திய எழுத்தாளர் நிரையொன்றுள்ளது. உருவகத்தன்மை ஒரு முக்கிய பொது அம்சம். இது "கொந்தளிப்பு" போன்ற கதைகளில் சு.ரா தொடங்கிவைத்து ஆனால் முழுமையாக வளர்த்தெடுக்காத பண்பு என கருதுகிறேன். "நட்ராஜ் மகராஜ்" நாவலின் கடைசி பகுதியில் காஃப்காவின் நீதியின் வாசல் சாயலை எளிதில் கண்டுபிடிக்கலாம்.நிழலின் தனிமை நாவலும் எனக்கு பிடித்ததே. "பலி" போன்ற புகழ்பெற்ற அவருடைய ஆரம்பக்கட்ட கதைகள் எனக்கு உவப்பானவையல்ல. ஆனால் அவருடைய நெடுங்கதைகள் கூடுதல் கவனம் கோருபவை.
"பிறகொரு இரவு" சந்தேகமேயில்லாமல் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்று.காந்தி,டால்ஸ்டாய் இருவரும் தேவிபாரதியின் ஆதர்சங்கள்.அக்கதையில் இருவருமே ஆழமாக வெளிப்படுகிறார்கள்.டால்ஸ்டாய் போல, ஒரு ரயில் நிலையத்தில் அனாதையாக அமைதியாக மரணிக்க காந்தி விரும்புகிறார்.ஆனால் மொத்த தேசமும் அவரை துப்பாக்கி முனைக்கு போகச் சொல்கிறது. "செத்துப் போ!செத்துப் போ!" என்கிறது. கடைசியில் காந்தியும் அக்கொலைக்களத்தினை தேர்வு செய்கிறார். காந்தியின் ஆன்மீக போராட்டம் வலுவாக அக்கதையில் பதிவாகியிருக்கும்.
சில வருடங்கள் முன்னால் தேவிபாரதி ஒரு விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை படித்திருக்கிறேன்.இரண்டாவது பிறப்பில் அவர் மேலும் தீவிரமாக செயலாற்ற தொடங்கினார். நொய்யல் எனும் பெரிய நாவலை இயற்றினார். "Resilience" இலக்கியத்தின் அதி முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று என்பது என் நம்பிக்கை. தேவிபாரதியின் எழுத்துக்களில் அதை பார்க்கலாம். மொழியின் செறிவுத்தன்மையில் அவர் ஆற்றலை புலப்படுத்தியபடியிருக்கிறார்.
தேவிபாரதிக்கு விருது என்பது இன்னொரு கோணத்திலும் முக்கியமானது. சாகித்திய அகாடெமி விருது பெற்ற பிற நவீன இலக்கியவாதிகள் பெரும்பாலும் அன்னியத்தன்மையை மைய பண்பாக கொண்டவர்கள் அல்லர். மகத்தான சாதனையாளர்களாக இருந்தபோதும் பொது சமூகத்துடன் இசைந்து செல்கிற பாதைகள் அவர்களிடம் உண்டு. ஆனந்த விகடனில் அவர்கள் எழுதினால்கூட வேறுபாடிருக்காது. ஆனால் தேவிபாரதியின் எழுத்துக்கள் அத்தகையவை அல்ல. எனவே இவ்விருது மேலும் பாராட்டத்தக்கது. பரிதவிப்பை ஒப்புக்கொள்வதில் ஒரு நேர்மை இருக்கிறது. அதை நேரடியாக எதிர்கொள்வதில் ஒரு துணிச்சல் இருக்கிறது. தேவிபாரதிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment