Wednesday, 4 March 2026

மொழியின் இடைவெளி

ஏ.வி.மணிகண்டன்

ஏ.வி.மணிகண்டனின் புதிய கட்டுரை இன்று அகழில் வெளியாகியுள்ளது. எழுத்து சார்ந்து மணி ஒரு நல்ல பருவத்தில் இருக்கிறார். தொடர்ந்து அகழில் அவருடைய விரிவான கட்டுரைகள் பிரசுரமாகின்றன. கோத்திக் கலைப் பற்றி ஒரு குறுந்தொடரை சமீபத்தில்தான் எழுதியிருந்தார்.

"அஹம் மந்திராஸ்மி" எனும் இந்த கட்டுரை நகுலனின் "நினைவுப் பாதை" நாவல் பற்றியது. மணி தன் கட்டுரையில், நகுலனுடைய நாவலை ஆதாரமாக வைத்து மொழிக்கும் தன்னிலை உருவாக்கத்துக்கும் இடையிலான உறவை விசாரிக்கிறார். மொழிக்கு எப்போதுமே ஓர் இரட்டைக் குணம் உண்டு. அர்த்தங்களை உருவாக்கும் திறன், மறைக்கும் திறன் - இரண்டையுமே மொழி கொண்டிருக்கிறது. நாம் இதை அன்றாடத்திலேயே பல நேரங்களில் பார்த்திருப்போம். "நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்குறதில்ல" என்று சிலர் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி சொல்வதனாலேயே தாம் நினைக்கிற எந்த கெடுதலும் அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.  மணி தன் கட்டுரையை அந்த இடத்திலிருந்தே ஆரம்பிக்கிறார். சமூகம் மொழி வழியாகவே தன்னை புனைந்துக் கொள்கிறது என்கிறார். அவற்றில் உள்ள இடைவெளிகளையும் மொழியினாலேயே பரிசீலிக்க வேண்டியுள்ளது என்கிறார். 

எந்த எழுத்தாளரும் மொழியின் இந்த அம்சத்தை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. ஒவ்வொரு வரி எழுதும்போது மொழியில் அர்த்தம் சரியாக கூடுவதையும், சரியாக வெளிப்படாததையும் ஒரு எழுத்தாளர் கண்டுகொண்டே இருப்பார். ஓர் உணர்ச்சியை மொழியில் சொன்னதும் சில நேரங்களில் அது பெருகுகிறது; சில நேரங்களில் அது அர்த்தமிழக்கிறது. என் திருவருட்செல்வி நூல் முன்னுரையில் இதையே இப்படி குறிப்பிட்டேன். "மொழி விசித்திரமானது. ஒரு நிகழ்வை நாம் வெவ்வேறு வார்த்தைகளில் திரும்ப திரும்ப சொல்லும்போது அந்த நிகழ்வு பரிச்சயமாகிவிடுகிறது. எடையிழக்கிறது. பெருந்துயரங்களை எல்லாம்  அப்படி பேசிப் பேசியே கடக்கிறோம். இலக்கியத்திலோ நேரெதிரான விளைவு தேவைப்படுகிறது". இந்த முரண்பாட்டினாலேயே இலக்கியம் மொழியை எந்நேரமும் பரிசீலிக்கிறது. 

மணி இந்த அம்சத்தை இன்னும் விரிவாக - இன்றைய இணையம்  மற்றும் சமூக ஊடக சூழலின் பின்னனியில் வைத்து பேசுகிறார்.  இலக்கிய அழகியல் வரலாற்றையும் இணைக்கோடாக வரித்துக் கொள்கிறார். மொழி வழியே உன்னதத்தை அடைய முற்படுவது கற்பனாவாத அழகியல்; மொழியை பரிசீலித்து ரத்து செய்ய விரும்புவது நவீனத்துவ அழகியல் என ஒரு வரைபடத்திலிருந்து தொடங்குகிறார். அவ்வகையில் கற்பனாவாத எழுத்தின் ஒரு முக்கியமான எல்லையை விவாதிக்கும் கட்டுரை என்றுக்கூட இதை சொல்லலாம். லா.ச.ரா, நகுலன் ஆகிய இருவரின் எழுத்தையும் எதிரெதிரே வைத்து அந்த சித்திரத்தை மணி வரைகிறார். லா.ச.ரா மீதான நேரடியான கடும் விமர்சனங்களும் கட்டுரையில் உள்ளன. 

நடையாளர்கள் (Stylists)  மற்றும் சாரம்சவாதிகள் (essentialists) மீதும் மணியின் விமர்சனங்கள் தொடர்கின்றன. நடையாளர்கள் எப்போதுமே கற்பனாவாத அம்சம் கூடியவர்களாக இருக்கிறார்கள்; எல்லைக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமகாலத்தில் சிறந்த உதாரணம் பா.திருச்செந்தாழை. அவர் நடைதான் அவருடைய அடையாளம். ஆனால் அதுதான் அவர் எல்லையும்.  பலரும் பல தசாப்தங்களாக குறிப்பிடுகிற, ஆனால் அடிக்கடி நாம் மறந்துவிடுகிற விஷயம் அது. தனித்தனி நடைகளின் காலம், வீழ்ச்சியின் காலம் என்று ஆரம்பத்திலேயே டி.எஸ்.எலியட்  அதை அடையாளம் காட்டினார். மணி இதை இன்னும் வளர்த்து சாராம்சவாதிகளிடமும் இப்பண்பு வெளிப்படும் விதம் பற்றி பேசுகிறார்.

இக்கட்டுரையின் விசேஷ அம்சம் அல்லது பொதுவாக மணியின் எல்லா கட்டுரைகளிலும் இருக்கிற விசேஷ அம்சம் என்பது – தொடர்ந்து படிமங்கள் வழியாகவே தொடர்புறுத்தலை நிகழ்த்துவது. லா.ச.ராவின் “சிந்தா நதி”, நகுலனின் “நினைவுப் பாதை” இவ்விருத் தலைப்புகள் வழியாகவே ஓர் அழகான வாசிப்பை அவரால் நிகழ்த்த முடிகிறது. “நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. நம்மை எங்கோ அடித்துச் செல்வது, நாம் மிதக்க வேண்டியது மட்டும்தான். நினைவுப்பாதையில் நாமே பின்னோக்கி நடந்து செல்ல வேண்டும், கால் தேய” என இரு உலகங்களையும் அனாயசமாக வேறுபடுத்துகிறார். போலவே உண்ணாமுலை, ரப்பர் நிப்பிள் எனும் உருவகங்களும் அபாரமானவை. இரண்டையும் ஆசிரியர்களின் உலகங்களிலிருந்தே அவர் பெற்றிருக்கிறார். நாம் வழிபடுவது உண்ணாமுலையினையா அல்லது ரப்பர் நிப்பிளையா எனும் கேள்வி ஆழமானது. 

அடிப்படையில் புகைப்படக் கலைஞர் என்பதனால் காண்பியல் கலை வழியே வெவ்வேறு உதாரணங்களை மணி எப்போதும் அளிக்கிறார். இக்கட்டுரையிலேயே ரேச்சல் ஒயிட்ரெட்டின் “நினைவுச் சின்னம்” (Monument) மையப் படிமமாக விரிந்துள்ளது. மேலும் நல்ல பகடியுணர்வுடன் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சலிப்பில்லாமல் வாசிக்க முடிகிறது. லா.ச.ராவை “கொலையே நடந்தாலும் தத்தரீன்னா நிற்காத ரேடியோ” என்று மணி விமர்சிக்கும்போது ஒருவர் புன்னகைக்காமல் இருக்க முடியாது. லா.ச.ராவின் அபிமானிகள்கூட முயன்றால் சிரித்துவிடலாம். தலைப்பிலேயே பகடி தொடங்கிவிடுகிறது. “எல்லாமே பிரம்மம்” (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை “எல்லாமே மொழி” (அஹம் மந்திராஸ்மி) என்று தலைகீழாக்கியே கட்டுரையை எழுதியுள்ளார். இன்னொரு புகைப்படம் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. “UsedBooks Bazaar” எனும் புத்தக கடையில் லா.ச.ராவின் நூலுக்கு வந்துள்ள விளம்பரம். அப்படத்தை இக்கட்டுரையில் சேர்த்து லா.ச.ராவை பழைய புத்தக கடைக்கு அனுப்பிவிட்டிருக்கிறார்.


போன நூற்றாண்டின் இறுதியில், மொழியியல் தத்துவத்தின் பிரதான பேசுபொருள் ஆனது. அந்த மாற்றத்தை சுருக்கமாக - கருத்தின் பொருளின் இயல்பை பேசுவதற்கு பதிலாக மொழியின் இயல்பை பேசுவது என குறிப்பிடலாம். அகழிலேயே சில ஆண்டுகள் முன்பு மொழியியலை அறிமுகப்படுத்தி ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரை வெளியிட்டுள்ளோம். மணியின் கட்டுரை இரண்டு விதங்களில் இந்த பேசுபொருளை விஸ்தீரணப்படுத்துகிறது. 

ஒன்று, மொழியியல் கருத்துக்களை தத்துவக் கோட்பாடாக இல்லாமல் அழகியல் வகைமைகள் வழியே இக்கட்டுரை முன்வைக்கிறது. அதாவது இது முழுக்க முழுக்க ஓர் இலக்கிய விமர்சனக் கட்டுரையாக உருப்பெற்றிருக்கிறது. நம் இலக்கியத்தை, நம் முன்னோடிகளை தொகுத்து புரிந்துகொள்வதற்கான அசல் எத்தனத்தை கொண்டுள்ளது. இன்றைய தகவல் பெருக்கக் காலத்தில், வெறும் கருத்துக்களை தெரிந்துகொள்வது ஒரு விஷயமே அல்ல. அதை அனுபவமாக்கி விசாரிப்பதே மேலும் சவாலானது. படைப்பூக்கத்தை கோருவது. 

இரண்டாவதாக, மொழி வழியே தன்னிலையை உருவாக்கிக் கொள்வதை கலை இலக்கியவாதிகளின் விசேஷ சிக்கலாக முன்வைக்கிறது. எல்லா மனிதர்களுக்குமே இச்சிக்கல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பேச்சின் மூலம்தான் மனிதன் உலகத்தை கண்டடைகிறான் என்பார்கள் மொழியிலாளர்கள். ஆனால், சமகாலச் சூழலில், எழுத்தாளர்கள் இந்த ஆபத்துக்கு அதிகம் இரையாகும் வாய்ப்பிருப்பதாக மணி வாதிடுகிறார். மொழி அவர்கள் வெளிப்பாட்டு ஊடகம் என்பது முக்கியக் காரணம். அது உண்மை என்றுதான் நானும் நம்புகிறேன். ஒருவர் சதா இணையத்தில் “இன்னார்” – அறிவுஜீவி, எழுத்தாளர், வாசகர், பயணி, சுகவாசி, அரசியல் விமர்சகர், இனியவர், கசப்பானவர், காதலர் - என்று “மொழியில்”, “தன்னை” புனைந்துக் கொண்டே இருந்தால், அவர் எந்த தன்னிலையுடன் வாழ்வது? அனுபவங்களை எதிர்கொள்வது? சுயவிசாரனை மேற்கொள்வது? ஒரு பெண்ணால் தன்னுடலை தானே நிர்வாணமாக பார்க்கவே முடியாது என்பார் ஜான் பெர்ஜர். சமூக கட்டமைப்பின் திரைகள் அப்பெண்ணின் கண்களிலும் உண்டு என்ற அர்த்தத்தில். அது போல் ஒரு எழுத்தாளன் மொழியின் எடையால் தன்னையே பார்க்க முடியாமல் போனால், அது போல இன்னொரு துரதிருஷ்டம் இல்லை. 

இக்கட்டுரை தனிப்பட்ட வகையிலும் எனக்கு இசைவானது. இதில் உள்ள இரு கருத்துக்களை நான் ஏற்கனவே வேறொரு கட்டுரையில் வேறு விதத்தில் எழுதியிருக்கிறேன். ஜெயமோகன், தன் இலக்கிய முன்னோடிகள் நூலில் நகுலனை விமர்சித்து எழுதியுள்ளார். மணி இக்கட்டுரையில் அதனுடன் மாறுபடுகிறார். “ஜெயமோகனுடைய கதைசொல்லல் மரபு, தத்துவ நோக்கிலான விழுமியங்களை ஆராயும் மரபு. ஆகவே அவர் மொழியை வைத்து தன்னிலையை ஆராயும் நகுலனை நிராகரித்து செல்கிறார்” என்று எழுதுகிறார். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் முன்பு ஜெயமோகன் அவர்களின் “இலக்கிய முன்னோடிகள்” பற்றிய என்னுடைய "அழியாத் தடம்" கட்டுரையில் நானும் இதை சுட்டியிருந்தேன். “இலக்கிய முன்னோடிகள்”  தமிழ் நவீன இலக்கிய விமர்சனத்தில் ஒரு தனித்துவமான, சிறப்பான நூல்; செவ்வியல் என்று சொல்லத்தக்கது. ஆனால் அதில் நகுலன் பற்றிய அவர் கட்டுரை பாரபட்சமானது என்பதே என் கருத்து. [இப்படி அடுத்த தலைமுறையினர் மாறுபட்ட கருத்துடன் உரையாட விரும்புவதும் அந்நூலின் வெற்றிதான்]. அதே கட்டுரையில் நவீனத்துவத்தின் தீவிரம் இன்றைக்கு மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும் என முடித்திருப்பேன். “[நவீனத்துவத்தின் தீவிரத்தை] உயிர்த்தெழச் செய்வதற்கான கீதத்தை நாம் இனி உடனே இசைக்கவேண்டுமோ?”. மணி வெவ்வேறு வகைகளில் நவீனத்துவத்தின் தனித்து செயல்படும் போக்கை இக்கட்டுரையில் வழிமொழிவதைக் காண முடிகிறது.

மணியின் இக்கட்டுரையில் எனக்கு ஒரு வேறுபாடும் உண்டு. நகுலனின் சிறந்த கூறையும் லா.ச.ராவின் பலவீனமான கூறையும் இக்கட்டுரை ஒப்பிட்டு பேசுகிறது. இது தவிர்த்திருக்கக் கூடியதல்ல. ஏனென்றால் கட்டுரையின் வடிவமே அவ்விதம்தான் உள்ளது. எனினும் நகுலனின் மிகச் சிறந்த ஆக்கமாக சூழலில் கருதப்படுகிற “நினைவுப் பாதை” வழியாக அவரை விரிவாக அணுகும்போது அவர் எல்லைகள் பார்வையில் மறைந்துவிடுகின்றன. இதை குறிப்பிடுவது அவசியம். ஏனெனில் இது "மொழியியல்"-இன் எல்லையும் கூட. மொழி, மொழிவழி இயக்கம், மொழிவழி உலகு என்று பேசுவது எழுத்தாளர்களின் உலகை சுருக்கிவிடுகிறது. இதையே அசோகமித்திரன் நகுலன் மீதான விமர்சனமாக முன்வைத்தார். எழுத்து பற்றியே எழுதுகிறார் எனும் பொருளில். 2024ல் அமெரிக்க எழுத்தாளர் மெரிலின் ராபின்சனின் பேட்டியை அகழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். அதன் அறிமுகக் குறிப்பில் "தமிழில், தோற்றவியல் (Phenomenology) அம்சம் கொண்ட ஆக்கங்கள் நிறைய இல்லை எனலாம். நகுலன் போன்ற முன்னோடிகள் எழுதியவைக்கூட வலுவானவை அல்ல" என்று எழுதியிருந்தேன். ராபின்சனின் எழுத்து நகுலன் உலகுடன் ஒருவகையில் நெருக்கமானது. இன்னொரு வகையில் அதை கடந்து வளர்வது.

தத்துவத்திலேயே மொழியியலின் செல்வாக்கு வெகு முன்பாகவே குறைந்துவிட்டது என்பார்கள். வறுமை, போர், தீவிரவாதம், சூழலிய சீர்கேடு போன்ற "யதார்த்த" பிரச்சனைகளுக்கு மொழியியலால் பதில் அளிக்க முடியவில்லை. மேலும் இன்றைக்கு காட்சி ஊடகமே செல்வாக்கு நிரம்பியது. மொழி வழியாகத்தான் இன்று ஒருவர் தன்னை புனைய வேண்டும் என்றில்லை. படங்கள் வழியாகவும் செய்யலாம். புத்தக அடுக்கின் முன்னால் நிற்பது, புத்தகத்தை படிப்பது போல நிற்பது, மைக் முன்னால் நிற்பது இப்படி வெவ்வேறு படங்கள் வழியாகவும் தன்னை புனைந்துக் கொள்ளலாம் [அண்ணாந்து வானத்தை பாப்பதையும், தாடையில் பேனா வைப்பதையும் வைரமுத்து இன்னமும் கைவிடவில்லை]. ஆனால் மணி, தன்னை வெளியே புனைந்து வைப்பதற்கும், தனக்குள்ளேயே புனைந்து கொள்வதற்குமான வித்தியாசத்தை பேசுகிறார். இவ்விடத்தில்தான் மொழி இன்னமும் பொருத்தபாட்டுடையதாகிறது.

ஒயிட்ரெட்டின்- Monument
ஒயிட்ரெட்டின்- Monument

                                                        

இந்த ஒட்டுமொத்த சுழலிலிருந்து நகுலன் மொழி வழியாகவே தப்பிக்கவும் செய்கிறார் என்பது மணியின் அழகான கண்டடைதல்.  மொழியில் இடைவெளி வேண்டும் என்பதை இக்கட்டுரையின் பிரகடனமாக கொள்ளலாம். அந்த இடைவெளிதான் ஒயிட்ரெட்டின் நினைவுச் சின்னத்தில் காலி இடமாக உள்ளது. அந்த இடைவெளியில் தான் மொழி, சுசீலாவை ஜனிக்கிறது; அந்த இடைவெளியில்தான் மொழி மந்திரமாகிறது; கவிதையாகிறது.

பிரியத்திற்குரிய மணிக்கு வாழ்த்துக்கள்!



No comments:

Post a Comment