Friday 8 September 2023

சுஜாதாவின் “கணேஷ் – வசந்த்”

 எப்படி ஆரம்பித்தது தெரியவில்லை. ஒரு மாதத்தில் பத்துக்கு மேற்பட்ட கணேஷ்-வசந்த் நாவல்கள் வாசித்துவிட்டேன்.  “கிண்டில் அன்லிமிடெட்” ஒரு பொக்கிஷம்தான்.  மாதாமாதம் சந்தாவையும் வாசிப்பையும் கணக்கு போடும்போது லாபமா நஷ்டமா என்று குழப்பம் வந்தாலும் முக்கியமான பல நூல்கள் கிடைக்கின்றன. அரசு நூலகத்தில் ஒரே எழுத்தாளரின் நூல்களை வரிசையாக எடுத்து படிக்கும் அனுபவம் வாய்க்கிறது. தமிழில் “கிழக்கு” பதிப்பகம் அதிக எண்ணிக்கையில் பதிவேற்றியிருக்கிறது. சுஜாதாவின் பல புத்தகங்கள் கிடைக்கின்றன.  திரைப்படங்களுக்கு ஓ.டி.டி போல புத்தகங்களுக்கு இனி கிண்டில் அன்லிமிடெட். 

1968ல் தான் சுஜாதா முதல்முறையாக கணேஷ் எனும் கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். 1973ல் கணேஷின் உதவியாளராக வசந்த் சேர்ந்துகொள்கிறார். இந்த வக்கீல் இரட்டையர்களை வைத்து 25க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். 35 வருடங்கள் வயதே ஆகாமல், பல குற்றங்களை துப்பறிந்திருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோம்ஸ்- டாக்டர் வாட்சன் போல தமிழில் ஒரு துப்பறியும் ஜோடி. பீரும் ரெமி மார்டினும் குடித்தபடி சீரியல் கில்லர்களை கண்டுபிடிக்கிறார்கள். பண மோசடிளை வெளிக் கொண்டு வருகிறார்கள். சதி திட்டங்களை முறியடிக்கிறார்கள். சென்னை முழுக்க - பூந்தமல்லியிலிருந்து கடற்கரை சாலை வரை - சுற்றுகிறார்கள். நடுவே அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறார்கள். புத்திசாலியான வக்கீல்கள். நீதி நியாயம் பற்றி பொதுவாக பேசிக் கொள்வது கிடையாது.


"கணேஷ்-வசந்த்" வாசிப்பு பற்றி மேலும்,

  1. ஏன் எப்போதுமே துப்பறியும் கதைகளில் இரட்டை நாயகர்கள்? நடைமுறை அணுகூலங்கள் ஒரு காரணம். கடைசி காட்சியில் கனேஷ் வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளும்போது போலீஸ் வரும்வரை அவகாசம் இருக்காது. வசந்த் காப்பாற்றிவிடலாம். இரண்டு எதிரெதிர் எல்லைகளின் அழகும் சேர்கிறது. கணேஷ் மூளையாக செயல்படுகிறான். அவனுக்கு திறமையாக சதுரங்கம் விளையாட தெரிந்திருக்கிறது. வசந்த் பெண்களின் ஆராதகன். துடுக்கான செயல் வீரன். கஞ்சா எங்கே கிடைக்கும், பாலியல் தொழிலாளியை எப்படி பேசி அழைத்து வருவது போன்றவற்றை தெரிந்து வைத்திருக்கிறான். துப்பறியும்போது என்ன தகவல் எப்போது தேவைப்படும் என்று கணிக்க முடியாது. மேலும் துப்பறிவது ரொம்ப தனிமையான வேலை. இரண்டு பேராக இருந்தால்தான் சரிவரும். ஆனால் மூன்று பேர் என்றால் கூட்டமாகிவிடும்.

  2. உரையாடல் எழுதுவதிலும் காட்சி விவரனைகளிலும் சுஜாதா ஒரு மாஸ்டர். நவீன பங்களாவோ, பழைய கட்டிடத்தில் இயங்கும் ஒரு பாடாவதி பத்திரிக்கை அலுவலகமோ - சில வரிகளில் முழு சித்திரத்தையும் தீட்டிவிடுகிறார். விதவிதமான பொருட்கள் வழியாகவே விதவிதமான மனிதர்களை வரைந்துக் காட்டுகிறார். மனிதர் என்பவர் அவர் கையில் வைத்திருக்கும் புத்தகம்; வீட்டில் மாட்டியிருக்கும் சாமிப் படம்; பயன்படுத்தும் மின்சாதனம்; அணிந்திருக்கும் ஆடை. இவையன்றி வேறில்லை என்று நம்ப வைத்துவிடுகிறார். "மனம்" எனும் வஸ்து மேல் அவருக்கு நம்பிக்கையிருந்த மாதிரி தெரியவில்லை. 

    இடத்தையும் பொருளையும் போலவே வேலையும் மனிதர்களில் ஊடுருவதை சுஜாதாவின் எழுத்துக்களில் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. கூர்மையான அவதானிப்பு வழியாக அதை கடத்துகிறார். "ஐந்தாவது அத்தியாயம்" நாவலில் ஒரேயொரு காட்சியில் வரக்கூடிய பத்திரிக்கை ஆசிரியரை அவ்வளவு துல்லியமாக வார்த்துவிடுகிறார். மருத்துவர், செவிலி, போலீஸ் கான்ஸ்டெபிள் போன்ற உதிரி கதாபாத்திரங்கள் சுஜாதாவின் உலகில் கச்சிதமாக வெளிப்படுகிறார்கள். உண்மையில் சுஜாதாவினுடையது தனித்தனி மனிதர்களின் உலகம் அல்ல. வெவ்வேறு பொருட்களின் அடையாளங்களின் உலகம்.

  3. கணேஷ்-வசந்த் குற்றங்களை விசாரிப்பதில்லை. குற்றவாளிகளையே கண்டுபிடிக்கிறார்கள்.

  4. குற்றப் புலனாய்வு கதையாக இருந்தாலும் கணேஷ்-வசந்த் ஒரு தப்பித்தல் புனைவுதான். எஸ்கேபிச இலக்கியம்.  வாழ்க்கையின் நிஜமான உபத்திரவங்கள் இல்லாத ஒரு கற்பனை உலகை சுஜாதா உருவாக்கியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மதியத் தூக்கம் போல தொல்லையில்லாத இனிமை. [இப்படி வகைப்படுத்தும்போது சுஜாதாவுக்கு மூக்கில் நெருப்பு வரும் என நினைக்கிறேன். யாரோ ஒரு பெண்மணி "சுஜாதாவுடையது லைட் ரீடிங் எழுத்து" என்று சொல்லப் போக, சீண்டலாக ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார் - "இடக்கையில் வாட்ச் அணிந்த இந்த இண்டலக்சுவர் ஸ்‌ரீமதி" என்று தன் பாணியில் இடறிவிட்டு] 

    பி.ஜி.வுட்ஹவுஸின் ஜீவ்ஸ் கதைகள் தப்பித்தல் வகைமையில் பிரசித்தி பெற்றவை. எப்படியும் ஜீவ்ஸ் எல்லா பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவான். கணேஷ் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவது போல. இந்த உறுதிப்பாட்டுக்கான தேவை இருக்கவே செய்கிறது.  ஆனால் வுட்ஹவுஸ் மற்றும் சுஜாதா போல எழுத்து நடையில் புதுமையும் பாய்ச்சலும் நிகழ்த்துபவர்களே வெற்றிகரமான தப்பித்தல் புனைவுகளை எழுத முடியும். அத்தகைய எழுத்துக்கள் இப்போதும் வரவேண்டும் என்று யாராவது மனு எழுதினால் நானும் கையெழுத்து போடுவேன்.

  5. "மலை மாளிகை", "மேலும் ஒரு குற்றம்" என்று இரண்டு நாவல்கள் மலை பிரதேசங்களில் நடக்கின்றன. சுஜாதா லயிப்புடன் மலைப் பகுதிகளை விவரித்திருக்கிறார். மலை வாசஸ்தலங்களை குற்றத்துடன்  இணைப்பது எல்லா காலத்திலும் நடக்கிறது. பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உயரமான மரங்கள். பச்சை வெளி. நடுங்கும் குளிர். தரையிறங்கும் மேகங்கள்.  பாடல் காட்சியும் எடுக்கலாம். கொலைக் காட்சிக்கும் பொருத்தமாக இருக்கும். அழகும் அழிவும் அவ்வளவு பக்கத்தில் இருக்கின்றன. கடவுள் மூச்சுவிடும் மலைக்கு கீழே நரகத்தின் வாய் போல் ஆழமான பள்ளத்தாக்கு திறந்திருக்கிறது. 

  6. வசந்த் பெண்கள் பற்றி பேசுவதெல்லாம் அந்த காலத்திலும் ரசிக்கப்பட்டிருக்குமா தெரியவில்லை. டிவிட்டரில் (புதிய நாமகரணம்படி எக்ஸில்) ஹேஷ்டேக் போட்டு கேன்சல் செய்ய வேண்டிய அளவில், சுஜாதாவின் எழுத்துக்களில் பாலியல் கொச்சை இருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியை குலுங்க குலுங்க ஓட வைத்து அறிமுகம் செய்வது போலதான் பெண் விவரணைகள் வருகின்றன. வசந்த்தை ஒரு பீடோபைல் என்று விமர்சிக்கிற மதிப்புரை வீடியோவைக்கூட இணையத்தில் பார்த்தேன்.

  7. "விபரீத கோட்பாடு", "மாயா", "மலை மாளிகை" போன்றவற்றில் லேசாக தலைக்காட்டும் அமானுஷ்ய அம்சமே அவற்றின் ஈர்ப்பைக் கூட்டுகிறது. "மலை மாளிகை" ஒரு நீண்ட சிறுகதையாக மிக நல்ல ஆக்கம். கதைத் திருப்பம் சுவாரஸ்யப்படுவது விளக்கக்கூடிய புத்திசாலித்தனத்தால் அல்ல; மர்மத்தினாலேயே என்று திரும்பவும் தோன்றியது.  

  8. உயர்நீதிமன்றம் அருகே தம்புச்செட்டித் தெருவுக்கு போனால் கணேஷ் வசந்த்தை பார்க்க முடியாது; ராமகிருஷ்ணா ஓட்டலில் சாப்பிட முடியாது என்பது  வியப்பூட்டுகிறது. யோசித்தால், நீண்ட கால நோக்கில் மனிதர்களைவிட புனைவு கதாபாத்திரங்களே "நிஜமாய்" இருக்கிறார்கள். ரஸ்கல்நிகோவ் பற்றி உலகம் முழுக்க எழுதப்பட்டிருக்கும் உளவியல் ஆய்வுகளை பார்க்கும்போது அப்படி ஒரு மனிதனே பீட்டர்ஸ்பெர்கில் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள மனமே வராது.  உயிரோடிருக்கும் மனிதர்களைவிட "இல்லாத" மனிதர்களே உலகை அதிகம் வழிநடத்துகிறார்கள்.  சிலைகள் அரசு கோப்புகள் எழுதுகின்றன. ஆவிகள் கனவை பறித்துக் கொள்கின்றன. வாழும் மனிதனோ ஒரு பாவப்பட்ட இருப்பு. 

  9. வேலையில்லா திண்டாட்டம், எமெர்ஜென்ஸி இவை எல்லாம் வந்து போன எழுபதுகளிலேயே காயத்ரி, ப்ரியா என்று "கணேஷ்- வசந்த்" நாவல்கள் திரைப்படங்களாக வெளியாகிருக்கின்றன. அப்புறம் இரண்டாயிரத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் சுஹாசினி இயக்கி மினித் தொடராக சன் டிவியில் வந்திருக்கிறது. யுடியூபில் சிறிய முன்னோட்ட காட்சி மட்டுமே பார்க்க கிடைக்கிறது. சமீபத்திய தழுவலாக 2015ல் ஒரு படம் எடுக்கப்பட்டு ஹாட்ஸ்டாரில் இருக்கிறது. ஆர்வம் மேலிட பார்க்க ஆரம்பித்தேன். ஆர்வம் போய்விட்டது.

    தமிழில் நிறைய குற்ற புலனாய்வு திரைப்படங்கள் இன்று வெற்றி பெறுகின்றன. இந்த கணத்திலும் எங்கேயாவது ஒரு சினிமா கதை விவாதத்தில் யாராவது ஒரு உதவி இயக்குநர் "சார் நம்ம கணேஷ் வசந்த்தையே படமா பண்ணா என்ன?" என்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடும்.  "யார் சார் அவங்க? தெரிஞ்சவங்களா?" என்று மேத்யூ மெக்கானஹேவின் ட்ரூ டிடெக்டிவ்வும், பெனடிக்ட் கம்பர்பேச்சின் ஷெர்லாக்கும் அறிந்த இன்னொரு இளம் உதவி இயக்குநர் பதில் கேள்வி எழுப்பக்கூடும்.

  10. சுஜாதாவின் விரிவான பலதரப்பட்ட வாசிப்பே கணேஷ்-வசந்த் தொடரை மெருகேற்றியிருக்கிறது. சித்தர் பாடல், கீட்ஸ் கவிதை தொடங்கி மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் வரை ஸ்பெக்ட்ரத்தின் எல்லா வண்ணங்களும் கலவையாக தெரிகின்றன. ஒரு நாவலில் இலக்கிய அழகியல் பற்றி ஒரு சிற்றிதழ் வரியை கிண்டலுக்காய் எடுத்துப் போட்டிருக்கிறார். எல்லாமே விளையாட்டுதான். ஆனால் ரசிக்கும்படி இருக்கிறது. 

    சுஜாதாவுக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர், வுட்ஹவுஸ். இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் சொல்லலாம். வுட்ஹவுஸின் வாழ்க்கை விநோதமானது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜி ஆக்கிரமித்த பெர்லினில் அவர் சிக்கிக் கொண்டிருந்தார். எனினும் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு நகைச்சுவை எழுத்தாளாராகவே கடைசி வரை இருந்தார். கூச்ச சுபாவி. மனிதர்களுடனான உறவே அவருக்கு பெரிய சவால். "என்னை ஒரு மூலையில் உட்காரவைத்து எழுதச் சொல்லிவிட்டு விலகிவிட்டால் நான் உபத்திரவமில்லாத பிராணி" என்று தன்னை பற்றி சுஜாதா எழுதிய ஒரு வாசகம் வுட்ஹவுஸுக்கு அப்படியே பொருந்தும். 

    வுட்ஹவுஸ் ஏன் தொடர்ந்து வூஸ்டர்-ஜீவ்ஸ் கதைகள் எழுதினார் என்பதையும் சுஜாதா ஏன் கணேஷ்-வசந்த் எழுதினார் என்பதையும் என்னால் அந்தரங்கமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அந்த உணர்ச்சி மிக அணுக்கமாகவும் இருக்கிறது. தப்பித்தல் புனைவை தொடர்ந்து வாசிப்பதற்கு வாசகனுக்கு என்ன காரணம் இருக்கிறதோ அதே காரணம்தான் -இன்னும் பல மடங்கு அதிக எடையோடு- எழுத்தாளனுக்கும், அதை எழுதுவதற்கு.


கணேஷ் – வசந்த் தமிழ் விக்கி


No comments:

Post a Comment