Thursday 3 August 2023

அகழ் ஜீலை இதழ் - டி.எஸ்.எலியட்டின் செவ்வியல்

அகழ் ஜீலை இதழில் எலியட்டின் “செவ்வியல் என்றால் என்ன?” கட்டுரை என் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. நீண்ட கட்டுரை. முதல் பகுதி மட்டும் இந்த இதழில் பிரசுரமாகியிருக்கிறது. அடுத்த இதழில் இரண்டாவது பகுதி வாசிக்கக் கிடைக்கும். ஏப்ரலில் டெர்ரி ஈகிள்டனின் “இலக்கியம் என்றால் என்ன?” கட்டுரை வெளியாகியிருந்தது. இப்போது இன்னொரு கட்டுரை. இரண்டுமே இலக்கியத்தின் அடிப்படைகளை பேசுபவை. 2018 வாக்கில் கறட்டு வடிவில் ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்திருந்தவை.



லண்டனில் 1943ல் விர்ஜில் குழுமம் (The Virgil Society) உருவாக்கப்பட்டது. 2022வரைக் கூட கூட்டம் நடந்திருக்கிறது. எலியட்தான் அக்குழுமத்தின் முதல் தலைவர். அப்போது அவர் ஆற்றிய துவக்க உரைதான் – “செவ்வியல் என்றால் என்ன?”. எண்பது வருடங்களுக்கு முந்தைய கட்டுரை இன்றைக்கும் அற்புதமான வாசிப்பின்பத்தை அளிக்கிறது. ஐரோப்பிய கலாச்சாரத்தோடு, வேர் பின்னல் போல, ஆழமாக இணைக்கப்பட்டிருக்கும்போதும் அதன் அடிப்படை சிந்தனையை ஒரு தமிழ் மனதாலும் புரிந்துகொள்ள முடிகிறது. தன் சூழலோடு பொருத்தி வளர்க்க முடிகிறது.  

இலக்கியத்தை தனிமனித வெளிப்பாடு எனும் நிலையில் அணுகாமல் ஒரு தொடர் நிகழ்வாகவே எலியட் காண்கிறார். அதனால்தான் செவ்வியல் எழுதப்படுவதற்கு எழுத்தாளனின் மனம் மட்டும் முதிர்ச்சியடைந்தால் போதாது; மொழியும் நாகரீகமும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிறார். தன்னுடைய கருதுகோளை விளக்க ஆங்கில இலக்கியத்தை பதினான்காம் நூற்றாண்டிலிருந்து விரிவாக ஆராய்கிறார். ஆங்கில இலக்கியத்தில் செவ்வியல் ஆசிரியர் யார், செவ்வியல் காலகட்டம் எது போன்ற கேள்விகள் நம்மை ஆர்வமூட்ட வாய்ப்பு குறைவு. ஷேக்ஸ்பியரா மில்டனா எனும் பந்தயத்தில் நமக்கு பெரிய முதலீடு கிடையாது. ஆனால் எலியட்டின் அளவுகோல் முக்கியமானது; விழுமியங்கள் முக்கியமானவை. 

செவ்வியல் பற்றிய வரையறையே மையச் சரடு என்றாலும், எலியட் வெவ்வேறு பாதைகள் வழியே மையத்தை அணுகுகிறார். அசாத்தியமான கற்பனை பாய்ச்சல்களும், அவதானிப்புகளும் கட்டுரை முழுக்க உள்ளன. ஓர் உதாரணம் சொல்லலாம். பொதுவாக நடையாளர்கள் (Stylists) அல்லது நடையாளர்களின் ரசிகர்கள், எழுத்து என்பதே நடை தான் என்று சொல்வார்கள். நடையின் தனித்தன்மை மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக தோன்றும். ஆனால் எலியட் மிக துல்லியமாக “பொது நடையே” (Common Style)  நுட்பங்களுக்கு உரியது என்கிறார். ரசனையின் கூட்டிணைவு என்பது எலியட்டின் பிரயோகம். ஒரு சூழலில் எப்போது நடையின் தனித்தன்மை சார்ந்த அக்கறை மிகுதியாக இருக்கும்? இக்கேள்விக்கு எலியட் அளிக்கும் விளக்கம் ஆச்சர்யமூட்டுவது. இலக்கிய ஆய்வாளருக்கும் இலக்கியவாதிக்கும் நடுவிலான  வித்தியாசத்தினை எலியட்டின் இத்தகைய கூர்மையான அவதானிப்புகள் வழியே புரிந்துகொள்ளலாம்.

இந்த கட்டுரை எப்போதும் சிறு உறுத்தலையும் ஏற்படுத்தும்.  செவ்வியல் பற்றிய வரையறையில் எலியட் காண்பிக்கும் மிதமிஞ்சிய பிடிவாதத்தினால் உருவாகும் உறுத்தல். பொருட்படுத்தக்கத்தல்ல. ஆனால் கவனிக்காமல் இருக்க முடியாது. எலியட் செவ்வியலுக்கான தர்க்கங்களையும் ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகிறார். எதிரே இருப்பவரை அல்ல. தனக்குள்ளிருக்கும் யாரையோ நம்ப வைக்க போராடுவது மாதிரி. படைப்பிலக்கியவாதி ஓர் அழகியல் வடிவை முன்வைக்கும்போது இந்த அம்சத்தை தவிர்க்க முடியாது போல. அது அவனை பற்றிய பேச்சு என்பதனால். 


No comments:

Post a Comment