| ஏ.வி.மணிகண்டன் |
ஏ.வி.மணிகண்டனின் புதிய கட்டுரை இன்று அகழில் வெளியாகியுள்ளது. எழுத்து சார்ந்து மணி ஒரு நல்ல பருவத்தில் இருக்கிறார். தொடர்ந்து அகழில் அவருடைய விரிவான கட்டுரைகள் பிரசுரமாகின்றன. கோத்திக் கலைப் பற்றி ஒரு குறுந்தொடரை சமீபத்தில்தான் எழுதியிருந்தார்.
"அஹம் மந்திராஸ்மி" எனும் இந்த கட்டுரை நகுலனின் "நினைவுப் பாதை" நாவல் பற்றியது. மணி தன் கட்டுரையில், நகுலனுடைய நாவலை ஆதாரமாக வைத்து மொழிக்கும் தன்னிலை உருவாக்கத்துக்கும் இடையிலான உறவை விசாரிக்கிறார். மொழிக்கு எப்போதுமே ஓர் இரட்டைக் குணம் உண்டு. அர்த்தங்களை உருவாக்கும் திறன், மறைக்கும் திறன் - இரண்டையுமே மொழி கொண்டிருக்கிறது. நாம் இதை அன்றாடத்திலேயே பல நேரங்களில் பார்த்திருப்போம். "நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்குறதில்ல" என்று சிலர் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி சொல்வதனாலேயே தாம் நினைக்கிற எந்த கெடுதலும் அவர்களுக்கு தெரியாமல் இருக்கும். மணி தன் கட்டுரையை அந்த இடத்திலிருந்தே ஆரம்பிக்கிறார். சமூகம் மொழி வழியாகவே தன்னை புனைந்துக் கொள்கிறது என்கிறார். அவற்றில் உள்ள இடைவெளிகளையும் மொழியினாலேயே பரிசீலிக்க வேண்டியுள்ளது என்கிறார்.