Wednesday 20 April 2022

நீர்வழி (சிறுகதை)

தண்ணீர் உள்ளே வந்துவிடுமோ என்று பயந்து பயந்து வீட்டுக் கதவை திறக்க வேண்டியிருந்தது. ஓரடிக்கு வாசல் சட்டத்தில் செங்குத்தாக பலகை வைத்து அடைத்திருந்தபோதும் பயம் இருந்தது. மழைநீர் வாசல் படி வரை வந்துவிட்டது. இரவு முழுக்க மழை அப்படிக் கொட்டித் தீர்ந்திருந்தது. மழை ஓய்ந்த அமைதியும் மழையையே நினைவூட்டியது. சிறுவன் பலகையை தாண்டி வீட்டைவிட்டு வெளியே வந்து தண்ணீரில் இறங்கினான். அரைக்கால் சட்டை போட்டிருந்ததால் நீரின் சில்லிடும் குளுமை அவன் கால் மயிர்களை சிலிர்க்க வைத்தது. படியில் இறங்கி சாலைக்கு வந்தபோது முட்டிக்காலுக்கு மேலே தண்ணீர் போனது. அவன் கூசியபடி சிரித்து அம்மாவை பார்த்தான். புடவையை லேசாக உயர்த்தி பிடித்தபடி காலைத் தூக்கி பலகையை கடந்து அம்மாவும் தண்ணீரில் இறங்கினாள். வீட்டைப் பூட்டிவிட்டு சிறுவன் கையை பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். ஏரி வளர்ந்து அப்பகுதி தெருக்களை பாதி மூழ்கடித்திருந்தது. வீடுகள் தண்ணீரில் புதைந்திருந்தன. சாலையும் முங்கியிருந்தது. நிலம் கீழே நீரை உறிந்துத் தீர்க்க முயன்றுக் கொண்டிருந்தது. அம்மா ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்தாள். தண்ணீரில் என்னென்னவோ மிதந்து வந்தன. காட்டாமணி செடியின் பழுத்த இலை. பழையத் துணி. மரத் துண்டு. ஆளில்லாத தெர்மக்கோல் படகு. சிறுவன் அதை எட்டி பிடிக்க முயன்று தண்ணீரை வாத்துப் போல் அறைந்தான். தடுமாறி கிழே விழப் பார்த்தவனை அம்மா தூக்கி நிறுத்தினாள்.   

வெயில் முளைக்காத மதிய வானம் நீரில் பிரதிபலித்தது. பச்சை சாயை படிந்த வானில் அலை வட்டங்கள். சிறுவனும் அவன் அம்மாவும் ஏரியிலிருந்து வெளியே வந்தார்கள். தார்ச் சாலையில் அங்கங்கு நீர் பள்ளங்கள். மழைக் காலத்தின் பொறுமையோடு சைக்கிள்களும் பைக்குகளும் சாலையில் சென்றன. இளநீல வெளிச்சத்தில் ஒவ்வொரு பொருளும் துல்லியமாக தெரிந்தது. ஒவ்வொரு குரலும் துல்லியமாக கேட்டது. தார்ச் சாலைக்கு வந்ததும் அம்மா சிறுவன் கையை விடுவித்தாள். கால்களில் ஈரமிருந்ததால் இன்னமும் தண்ணீரில் இருப்பதான ஞாபகத்தோடே அவன் கொஞ்ச தூரம் ஓடினான். பிறகு அம்மா வரும் வரை நின்றான். பிறகு மீண்டும் ஓட்டம். இப்படியே அவர்கள் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்கள். சிறுவன் திரும்பி நின்று சற்றுத் தொலைவில் நடந்து வரும் அம்மாவை பார்க்கையில் அவளுக்கு பின்னால் தூரத்தில் வான் கோடாய் ஏரி தெரிந்தது. 

மொத்த ஏரியையும் ஒரே பார்வையில் பார்த்துவிட விரும்புவது மாதிரி சிறுவன் ஒருமுறை எகிறி குதித்து நிலத்துக்கு மீண்டபோது அவனுக்கு பக்கமாக மூன்று தெரு நாய்கள் குரைத்தபடி வந்து நின்றன. வள்வள்ளென்று அவை குரைக்கும் சத்தத்தில் உடலே அதிர்ந்தது. நடுவே இருந்த வெள்ளை நாய், அடிபட்டு அறுந்து தொங்கும் காதில் காய்ந்து ஒட்டிய குருதியோடு இருப்பதையும் அதை மற்ற இரண்டு நாய்கள் விரட்டுவதையும் சிறுவன் அப்புறம்தான் பார்த்தான். வெள்ளை நாய் தீனமாக குரைத்து ஒதுங்க மற்ற நாய்கள் தொண்டையில் உறுமலைத் தேக்கி பிறகு வாய் பிளந்து கூர்மையான பற்களைக் காட்டி குரைத்தன. சிறுவன் அந்த வெள்ளை நாயின் சீழ்பட்ட காதை பார்க்க முடியாமல் கண்ணை மூடினான். பிறகு குறுகுறுப்பு மேலிட, தலை சாய்த்து அதை உற்று பார்த்தான். வலியில் அது பரிதாபமாய் தலை சரித்து விலகியது. அம்மா பக்கத்தில் வந்து சிறுவனை முதுகில் தட்டி முன்னால் கூட்டிச் செல்ல, நாய்களின் குரைப்பொலி மங்கலாகிக் கொண்டே வந்தது. அவன் திரும்பி திரும்பி பார்த்தபடி நடக்கலானான். 

அவர்கள் காய்கறி கடைக்குள் நுழைந்தபோது சிறுவனின் அப்பா தக்காளியை எடைப் போட்டுக் கொண்டிருந்தார். கட்டைப் பையில் காய்களை போட்டுக் கொண்டு விடைபெற்ற எஞ்சினியரம்மா “என்னடா இன்னைக்கு ஸ்கூல் லீவா?” என்று கேட்க சிறுவன் பதில் சொல்லாமல் வெறுமனே வெறித்து பார்த்தான். காய்கறி பரப்பிய மேஜைகளின் காய்ந்த மர வாசத்துக்கு மேலே வெங்காயத் தோலும் கறிவேப்பிலையும் கலந்த தழை வாசம் கடையில் மிதந்தது. 

அப்பாவின் காலண்டை நின்று சிறுவன் அண்ணாந்து பார்த்தான். “என்னடா?” என்று அவர் கேட்டபோது பதில் சொல்லாமல் கையை பிடித்து இழுத்தான். கொஞ்சம் நேரம் அவனை வேடிக்கையாக பார்த்துவிட்டு பிறகு “இந்தா” என்று தன் சட்டை பையிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் தாளை எடுத்து அவனிடம் அப்பா கொடுத்தார். சாக்கை உதறி துடைப்பத்தால் கடையை பெறுக்கிக் கொண்டிருந்த அம்மா,”சாக்லேட்டாக வாங்கி சாப்பிடு. பூச்சி அரிச்சு வயிறு வலிக்கட்டும்” என்று கடிந்தாள். ஆனால் அம்மாவின் சொற்கள் சிறுவனை எட்டவில்லை. அதற்குள் அவன் கடையை விட்டு இறங்கி ஓடியிருந்தான். 

சகதியில் கால் படாமல் சிறுவன் தாவி தாவி நடந்தான். தெருப் பிள்ளையாருக்கு அடுத்த கட்டிடத்தில் இருந்த ஸ்டேஷனரி கடைக்கு அவன் போனபோது கடை வாசலில் முதியவர் அச்சுறுத்தும் பெரிய மீசையோடு பிளாடிக் ஸ்டூல் போட்டு உட்காந்திருந்தார். நடு மண்டை வழுக்கையைச் சுற்றி ஒட்ட கத்திரித்த வெள்ளை முடி அவரை தீவிரமான மனிதராய் காட்டியது. காது மந்தமானதால் யார் முகத்தையும் உற்று பார்த்தபடிதான் முதியவர் எப்போதும் பேசுவார். அதனாலேயே எல்லோரையும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிருக்கும் குணம் அவருக்கு.

“அந்த சால்கேட் கொடு தாத்தா” 

“என்னடா கிழிந்த நோட்டைக் கொடுத்து ஏமாத்த பார்க்கிறியா?” என்று ரூபாய் தாளை வெளிச்சத்தில் வைத்து பார்த்தார். வயசான சலிப்புப் போல் காந்தியின் முகத்தில் கோணலாய் ஒரு மடிப்பு. முட்டியில் கை வைத்து எழுந்து கிழிசல் இல்லாத அந்த பச்சை நிறத் தாளை முதியவர் உள்ளேக் கொண்டு போய் டப்பாவில் போட்டார். சிறுவனிடம் சாக்லேட்டை கொடுத்துவிட்டு மறுபடியும் ஸ்டூலில் அமர்ந்து தன் முதுகை அழுத்தி நீவிவிட்டார். மூச்சை இழுத்து விடும்போது மறுபடி வலி எடுத்தது. முதுகில். கீழிடுப்பில். தோள் பட்டையில். உடல் முழுக்க வலிதான். அவர் சௌர்கயமில்லாமல் அசைந்து சுவரோடு சாய்ந்துக் கொண்டார். பக்கத்து டெய்லர் கடையில் தையல் இயந்திரத்தின் சத்தத்துக்கு மேலே ரேடியோவில் ஒரு பழைய பாடல் ஒலித்தது. அது என்ன பாடல் என்று முதியவருக்கு புலப்படவில்லை. ஆனால் அவர் கேட்டு பழகிய, முணுமுணுத்திருக்கவும் வாய்ப்புள்ள பாடல்தான். சுசீலாவா ஜானகியா என்று தெரியாத பெண் குரலின் இனிமை தூரத்தில் கேட்டது. கூர்ந்து கவனித்தும் அப்பாடல் பிடி கிடைக்காததால் முதியவர் எரிச்சலோடு மறுபடியும் அசைந்து உட்கார்ந்தார். மறுபடியும் உடலில் வலியை உணர்ந்தார்.

சாக்லேட்டின் தங்க ரேப்பரை சிறுவன் பிரித்தபோது தகடு போல் அது மடிந்தது. நாக்கில் எச்சிலோடு கரையும் கசப்பையும் இனிப்பையும் சுவைத்தபடி சிறுவன் அந்த தெருவைச் சுற்றி வந்தான். அவ்வப்போது காய்கறி கடையில் இருந்து அம்மா எட்டி எட்டி பார்த்து சிறுவன் கண்களில் தென்படுகிறானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள். மழையை எதிர்நோக்கும் சோம்பல் தெருவையே மூடியிருந்தது. சைக்கிளில் மீன் விற்கும் ரெட்டியார், டெயல்ரோடு பீடியை பகிர்ந்தபடி உரையாடிக் கொண்டிருந்தார். தேநீர்க் கடையில் காலி கோப்பைகள் கழுவி காய வைக்கப்பட்டன. ஸ்டூலில் அமர்ந்திருந்த முதியவர் சற்றைக்குள் தூங்கி விழ ஆரம்பித்திருந்தார். வெளிச்சம் குன்றி வானம் கருநீலமாக மாற, அடுத்த மழைக்கான காத்திருப்போடு நிலம் கனத்துக் கொண்டிருந்தது. 

சாலையோரமாக சாக்லேட் கவரை தூக்கி எறிந்த சிறுவன் அப்போது மின்கம்பத்தை ஒட்டி ஒரு பாம்பை பார்த்தான். அதைக் கண்டு முதலில் அஞ்சி பதறியவன், சீறியபடி தன்னை துரத்தி வராத பாம்பின் உடலில் உயிர் இல்லை என்பதை உடனே புரிந்துக் கொண்டு தைரியமாக பக்கத்தில் போனான். கண்ணாடி உடலில் பாசி அப்பியது மாதிரி பச்சைத் தீற்று. தலை துண்டிக்கப்பட்ட நீண்ட சடலத்தை சிறுவன் குனிந்து பார்த்தான். தலை வெறும் வாயாக மட்டும் ஆனதுப் போல் கழுத்து பிளந்து கிடந்தது. சுற்றி மழை நீர், கால்வாயில் சரிந்து ஏரி நோக்கி வழிந்தோட, பாம்பிடமிருந்து விஷம் நீரில் இறங்கி நிலமெங்கும் பரவியிருக்கும் என அவனுக்கொரு நினைப்பு தோன்றியது. அந்த நினைப்புடனே தலையை சொறிந்தபடி அம்மாவைத் தேடி கடைக்குச் சென்றான். 

சிறுவன் உள்ளே போனபோது, கடை படிக்கட்டில் சிறுவனின் அப்பாவும் ஜெராக்ஸ் கடைக்காரரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். குங்குமமும் விபூதியும் வைத்த முகத்தில் அன்று காலை செய்த சவரத்தின் வழுவழுப்போடிருந்தார் ஜெராக்ஸ்கடைக்காரர். மூன்று நாட்களுக்கு மேல் அவர் எப்போதும் சவரம் செய்யாமல் இருப்பதில்லை. பாதி நாள் முடிந்தும், அவர் வெள்ளைச் சட்டையில் இஸ்திரியின் நேர்த்தி இன்னமும் மிச்சமிருந்தது. நிலத் தரகில் பணம் ஈட்டுவதே அவர் முதன்மை குறிக்கோள் என்பதால் மஞ்சள் பலகையோடும் இரண்டாம் விலையில் வாங்கிய ஜெராக்ஸ் மிஷினோடும் பக்கத்து போர்ஷனில் அவர் கடை பெயரளவில்தான் செயல்பட்டு வந்தது. பெரும்பாலும் அது மூடியே இருக்கும். திறந்தாலும் ஆள் வராது.

சிறுவனின் அப்பா தேநீர் சொல்லி அனுப்பினார். மேகம் மூடி வர, அந்த பகல் வேளையிலும் தேநீர் கோப்பைகளில் ஆவி பறப்பதை தெளிவாக பார்க்க முடிந்தது. 

“நிலம் சம்பந்தமாக ஒரு பார்ட்டியை பார்க்கப் போய் இப்போதுதான் திரும்பி வருகிறேன்”. ஜெராக்ஸ் கடைக்காரர் முதல் மிடறு தேநீரை அவசரமாக குடித்து நாக்கில் சூட்டை உணர்த்து உச்சுக் கொட்டினார்.  

“ஓகோ. நீ வந்ததும் சரிதான். நல்ல மழை வரும் போலிருக்கிறது. மழையில் மாட்டியிருப்பாய்” என்றார் சிறுவனின் அப்பா.

“மழை ஒரு தொல்லை. ஏற்கனவே அதில் மாட்டிதான் தொலைத்திருக்கிறேன்” 

“ஏன்? என்னாச்சு?”

“மழைக் காலத்தில் ஒரு பத்திரமும் ஒழுங்காய் அமைந்துத் தொலைவதில்லை அண்ணே. எந்த நிலத்தை காட்டப் போனாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிலத்தோட அளவே சுருங்கி போய் தெரியுது. முக்கால் கிரவுண்ட் என்று கூட்டி போய் காண்பித்தால் கண்ணில் நூறு சதுர அடி கூட தெரிவதில்லை. தண்ணியே மூடி விடுகிறது எல்லாத்தையும்”

“கமிஷன் கிடைக்காது என்றால் மனுசனுக்கு மழையே வேண்டாம் என சொன்னாலும் சொல்லுவ போலயே”

“அட அப்படி இல்லை”. ஜெராக்ஸ்கடைக்காரர் கோப்பையை படிக்கட்டில் வைத்தார். “ஏற்கனவே ஆயிரம் தொல்லை அண்ணே. இதில் மழை வேற”. அலுத்தபடி படிக்கட்டில் அனிச்சையாக கை வைத்து பிறகு கையில் ஒட்டிய மண்ணை அசூயையோடு தட்டிவிட்டார். வெள்ளைச் சட்டையில் அழுக்குப் பட்டிருக்கிறதா என்று கழுத்தை சரித்து பார்த்துக் கொண்டார். அவரிடம் ஒருவித நிலையின்மை வெளிப்பட்டது. நீண்ட நாட்களாய் அதிர்ஷ்டத்துக்கு தயாராக இருந்து களைத்துப் போனதுப் போல். 

 “ஏன் இன்னைக்கு இவ்வளவு சலிப்பு?” 

“அதை ஏன் கேட்கிறீர்கள்? அந்த ஆட்டோக்காரனோடு இன்னைக்கு மறுபடி சண்டை. நான் குறித்து வைத்த நிலத்தை வேறு பார்ட்டிக்கு முடித்துவிட பார்க்கிறான். சொல்லி சொல்லி பார்த்தும் அவன் கேட்கவில்லை. இன்னைக்கு காலையில் போய் அடித்தேவிட்டேன்”

முறத்தில் வெங்காயத்தை புடைத்து தோலை அகற்றிக் கொண்டிருந்த சிறுவனின் அம்மா ஒரு கணம் அசைவற்று நின்று மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தாள். அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் அயர்ச்சியோடு எழுந்து உடலை நெளித்துவிட்டு அப்பாவிடம் வந்து சேர்ந்தான். 

“என்னது அடித்துவிட்டியா?” என்று அதிர்ச்சியோடு வினவிய சிறுவனின் அப்பா, மகனை மடியில் இருத்திக் கொண்டார்.

“ஆமாம். ஆமாம்”. சிறுவனைக் கண்டதும் ஜெராக்ஸ்காரர் அந்த பேச்சை உடனடியாக துண்டிக்க விரும்பினார். “இப்படியே போகுது நம் பிழைப்பு” என்று கிளம்ப எத்தனித்தார்.

“கவனமா இருப்பா. அவன் ஆள் யாரோ எனனவோ”. எச்சரிக்கைப் போல் கையை விரித்தார். “நில வியாபாரமே தகராறான காரியம்தான். மண்ணும் பொன்னும் என்றும் சும்மாவா சொன்னார்கள்?”

“இதெல்லாம் பார்த்தால் முடியுமா அண்ணே? பொன்னே மண்ணில்தான் விளையுது. நாம் முயன்றால் அதை அறுவடை செய்துவிடலாம்”. திடீரென்று தோன்றிய உற்சாகத்தோடு எழுந்து நின்றார் ஜெராக்ஸ்காரர். நல்ல வளர்த்தியான மனிதர் என்பது இப்படி படியில் கூன்போட்டு உட்கார்ந்து மறுபடி எழுந்து நிற்கும்போதுதான் தெரிகிறது. “இப்போது மாட்டியிருப்பது செமத்தியான நிலம். துளி உப்பு கலக்காத சுத்தமான தண்ணீர் அந்த பூமியில் ஓடுது. இந்த டீலை மட்டும் முடித்துவிட்டால் போதும், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வந்த மாதிரிதான்”.

அவர் புறப்பட்டதும் சிறுவனின் அம்மா தன் கணவனை நெருங்கி “எதுக்கு அவனுடைய சேர்க்கை உங்களுக்கு? இதோ அடிதடி வரைக்கும் போய்விட்டான்” என்று கண்டிப்போடு சொன்னாள். அவர் எழுந்து மறைந்த காலி இடத்தையே சில நொடிகள் அர்த்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன்.

மழை நெருங்கி வர, அங்கே மனித சந்தடி ஓய்ந்திருந்தது. விளக்குக் கம்பத்தில் நின்ற காகமொன்று தன் சிறிய கண்களால் தெருவை அளவிட்டது. பிறகு, எங்கோ அடிபட்டு செத்துக் கொண்டிருந்த எலியின் குடலை கொத்தி தின்ன அதுவும் பறந்துச் சென்றது. காகத்தின் சிறகுப் போல் வானம் இருள, மாமரக் கிளைகளிலும் தென்னை மரக்கீற்றுகளிலும் மோதி சுழல்காற்று அலை எழுப்பியது. குப்பை மேட்டை கலைத்து பாலீதீன் பைகளை அந்தரத்தில் பறக்க வைத்து சாலையில் மண்ணை புரட்டி வீசியது. மழைக்கு முந்தைய மண் வாசம் எல்லோர் நாசியிலும் தங்கியது. உடனே அதை கலைத்துவிடுவது மாதிரி மழை ஒரே ஊற்றாய் பிளந்துக் கொட்டியது. சிறுவன் மூக்கை உறிந்து உறிந்து, மறையும் வாசத்தை தேடினான். அவன் அம்மா அவசரமாக காய்கறிகள் மேல் சாக்கினால் திரைப் போட்டாள். சாரல் படாதபடி மேஜைகளை உள்ளே இழுத்துத் தள்ளினார் அப்பா. 

முதலில் மழை வெவ்வேறு இடங்களில் மோதும் விதவிதமான சத்தங்கள் கேட்டன. பிறகு எல்லா வேறுபாடுகளும் அகன்று, மழை ஒரே சத்தமாய் நிலைத்தது. அதற்கு மறுமொழிப் போல் “ஊ” என்று கத்தியபடி சிறுவன் மழையை வேடிக்கை பார்த்தான். மழையில் உலகம் சின்னதானதுப் போல் இருந்தது. நீர்த் தாரைகளுக்கு பின்னால் கட்டிடங்கள் உள்வாங்கின. மழை மோதி மோதி சரிய, தேநீர்க் கடையின் தகரக் கூரை, ஊளைக் காற்றுக்கு மேலே, படபடவென்று அறையப்பட்டது. நீர் செம்மண்ணை அரித்து ஏரிக்கு போய்க்கொண்டிருந்தது.  மழையின் வேகம் கூடிக் கொண்டே இருக்க, சிறுவன் குளிருக்காக கைகளை கன்னத்தில் வைத்து ஒத்திக் கொண்டான். சட்டென்று கோபமாய் ஓர் இடி முழக்கம். உடனே இருளும் குளிரும் அச்சம் ஊட்டின. சிறுவன் முடிவில்லாமல் நிகழும் மழையை பார்த்துக் கொண்டிருந்தான். காணக் கிடைக்காத வசிப்பிடங்களில் இருந்து எத்தனையோ பாம்புகள் தற்சமயம் வெளியே வந்திருக்கக்கூடும். தலைகள் துண்டுபட்ட நூறு நூறு பாம்புடல்கள். சிறுவன் ஓடிப் போய் அம்மாவோடு ஒட்டிக் கொள்ள, அவளும் அவனை பாதுகாப்பாய் அணைத்துக் கொண்டாள். வெளியே மழை விடாமல் பெய்தது.

மழை நின்றபோது சாயுங்காலம் வந்து போன சுவடே தெரியவில்லை. சூரியனற்ற வானில் சூரியனின் நினைவுப் போல் எஞ்சியிருந்த ரத்த வண்ண ரேகை அவசரமாய் மறைந்து எங்கும் இருட்டு பரவியது. மழைக்கு பிந்தைய அமைதியில் ஒவ்வொரு சத்தமும் காலி அறையின் எதிரொலியாய் கேட்டது. ஆனால் அந்த அமைதி நெடுநேரம் நீடிக்கவில்லை. அந்தத் தெருவில் அன்று முதல் முறையாக மூன்று போலீஸ் ஜீப்புகள் வருகை செய்தபோது, அவ்விடமே பொருளற்று கலைந்துக் கிடந்தது. அங்குமிங்கும் மனிதர்கள் நடமாடிக் கொண்டேயிருந்தார்கள். மழைக்கான அறிகுறியை மட்டுமே எல்லோரும் அறிந்திருந்த அன்றைய நாளின் முடிவில், அவ்விடத்தில் ஒரு கொலை நடக்கும் என்று ஆரூடம் சொல்லப்பட்டிருந்தால் யாருமே அதை நம்பியிருக்க மாட்டார்கள். 

போலீஸ் ஜீப்புகளின் முகவிளக்குகள் சேற்றுக் குட்டைகளில் தங்க நிறத்தில் வெளிச்சத்தை பாய்ச்ச, காவல் அதிகாரிகள் அப்பகுதியனரிடம் விசாரனை மேற்கொண்டார்கள். உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் கதைகள் சேகரித்தனர். 

ஸ்டேஷனரிக் கடைக்குள் ஜெராக்ஸ்காரரின் உடலை சாக்பீஸால் வரைந்தார்கள். உதவி கேட்பது மாதிரி அவருடைய ஒரு கை மேல் நோக்கி நீண்டிருந்தது. சாக்பீஸ் உடல் சுருண்டு கிடந்தது. அந்த வெள்ளைக் கோடுகளை வைத்து ஜெராக்ஸ்காரர் வளர்த்தியானவர் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. 

“நீங்கள் கொலையை பார்த்தீர்களா?” கருப்பு பட்டை மாட்டிய உதவி ஆணையர் முதியவரின் வேட்டியில் ஒட்டியிருந்த ரத்தக் கறையை சந்தேகத்துடன் கவனித்து அவரிடம் கேள்வி கேட்டார்.

உதவி ஆணையரை முதியவர் குழப்பத்தோடு நோக்கினார்.  நிதானமான அந்த அதிகாரக் குரல் அவருக்கு கேட்கவில்லை. இன்ஸ்பெக்டர் துணைக்கு வந்து. “பெரியவரே நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கரிசனம் புலப்பட சத்தமாக கேட்டார். உதவி ஆணையரை பார்த்து “காது மந்தம் போல சார்” என்றார். 

முதியவர் படபடப்போடு பதில் சொல்ல ஆரம்பித்தார். உடல் வளைந்திருக்க, அச்சுறுத்தும் பெரிய மீசைக்கூட இப்போது அவரை சோகமான மனிதராகவே காட்டியது. “அந்த ஜெராக்ஸ்கடை தம்பி முதலில் கடைக்குள்ளே போச்சு சார். அப்பவே அது உடம்பில் ரத்தம் கொட்டிட்டுதான் இருந்துச்சு. அத துரத்திக்கிட்டு நாலைஞ்சு பேர் கத்தியோடு போனார்கள். யார் எவர் என்று எனக்கு ஒன்னுமே தெரியாது சார். அவர்கள் வந்த வேகத்தில் நானே தடுமாறி கீழே விழுந்திட்டேன். ஸ்டூல் கூட ஒடிஞ்சு போச்சு. என் வேட்டியில் கூட ரத்த கறை” அவர் வேட்டியில் ரத்தக் கறை அடர் சிவப்பிலிருந்து மர நிறத்துக்கு மாற ஆரம்பித்திருந்தது. பக்கத்தில் உபயோகப்படுத்த முடியாதபடி கால் மடிந்த பிளாஸ்டிக் ஸ்டூல். அசம்பாவிதத்தின் நிரந்தர சாட்சியம் போல். “எனக்கு எதுவுமே புரியல. நான் இப்படியே இங்கதான் சார் நின்னுக்கிட்டு இருந்தேன். என்னால் அசையக்கூட முடியல சார். நான் வேறு எதுவுமே பார்க்கல. ஆனா கடை முழுக்க ரத்தம் சார். தண்ணீர் மாதிரி ரத்தம் ஓடிச்சு சார்.  அது மட்டும் தான் நான் பார்த்தேன். என் வேட்டியில்கூட ரத்தக் கறை சார். இதக்கூட இனிமே எரிக்கதான் சார் வேணும். மத்தபடி எதுவுமே எனக்கு தெரியாது சார். அந்த தம்பி ஏன் சாவதற்கு இங்கே வந்துச்சுனு தெரியல. அது ஓடி வந்த சத்தமே எனக்கு முதலில் கேட்கல சார். கடைசியில் நான் கூட ஐயோ ஐயோ என்று கத்தினேன். ஆனால் அதுவும் யாருக்குமே கேட்கல. கடை முழுக்க ரத்தம் சார். அத எப்படி கழுவுறதுன்னே தெரியல. எல்லோரும் ஓடுனதுக்கு அப்புறமும் அந்த தம்பி உடம்பில் கொஞ்சமாக உயிர் மிச்சமிருந்தது சார். தாகம் தவிக்கிற மாதிரி அது விக்கிக்கிட்டே இருந்துச்சு. ஆனாலும் காப்பாத்தியிருக்க முடியாது சார். அவ்ளோ ரத்தமும் வெளியே வந்திடுச்சு. நான் ஐயோ ஐயோ என்று கத்தினேன் சார். ஆனால் எனக்கே என் குரல் அவ்வளவு சத்தமாக கேக்குறதில்ல சார்”

உதவி ஆணையரும் இன்ஸ்பெக்டரும் தலையாட்டினார்கள். “ஸ்டேட்மெண்ட் தேவைப்பட்டால் ஸ்டேஷனுக்கு கூப்பிடுகிறோம்.” என்று சொல்லி விலகினார்கள். 

மழை நீர் ஓடிய கால்வாயின் சலசலப்புக்கு மேல் சைரன் ஒலி இரைந்துக் கொண்டிருந்தது. தெரு முழுக்க மனிதர்கள் குழு குழுவாக நின்றிருந்தார்கள். தெருவில் அங்கங்கு ரத்தம் சொட்டி விழுந்திருந்தது. ஜெராக்ஸ்கடைக்கார விழுந்து ஓடிய இடத்தில் அவர் கை பதிந்த ரத்தத் தடயம். வழி நெடுக பிசுபிசுப்பாக ரத்தத் துளிகள்.  முதியவருக்கு பிறகு உதவி ஆணையர் காய்கறி கடைக்கு வந்து சிறுவனின் அப்பாவை விசாரித்தார். “ஏதாவது முன்பகை பற்றி உங்களுக்குத் தெரியுமா?”

சிறு தயக்கத்தை அடுத்து “தெரியவில்லை சார்” என்று அவர் பதில் சொன்னார்.  என்னென்னவோ யோசனைகள் ஓடுவதுப் போல் அவர் முகம் வெளிறியிருந்தது.

சிறுவனின் அம்மா “எங்களுக்கு எதுவுமே தெரியாது சார். இங்க வந்து அப்பப்போ பேசிட்டிருப்பார். மத்தபடி எங்கே போறார், எங்கே வர்றார் என்று இவரும் கேட்டுக்கிட்டதில்ல சார்” என சேர்த்துக் கொண்டார். போலீஸ்காரர்களை பார்த்ததும் பதற்றத்தில் அவள் கைகள் தாமாக கட்டிக் கொண்டன. எனினும் அவள் வலிந்து குறுக்கே புகுந்து பேசினாள். உதவி ஆணையர் அவளை கூர்ந்து கவனிக்க அவள் மரியாதை காட்டும்படி பலவீனமாக சிரித்தாள். பிறகு அந்த சூழ்நிலையில் சிரிக்கக்கூடாது என்று தோன்றியதுப் போல் முகத்தை இறுக்கிக் கொண்டாள். 

உதவி ஆணையர் “சரி சரி” என்றார். காலையில் பாலீஷ் செய்த பொலிவு இன்னும் எஞ்சியிருக்கிற பூட்ஸை யோசனையாக தரையில் தட்டிவிட்டு “ம்” என்று மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டார். “பெரிய துரதிருஷ்டம்தான்” இரண்டு கைகளையும் கோர்த்து “தெருவில் நைட்டு பாதுகாப்பு போடுங்க” என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, சில போலீஸ்காரர்களை தெருவில் காவலுக்கு நிறுத்திவிட்டு, அவர் ஜீப்பில் கிளம்பிச் சென்றதும் அந்த தெருவில் கொலை மெல்ல ஒரு ஞாபகமாக மட்டும் மாறத் தொடங்கியது.

“நம்பவே முடியவில்லையே”. சிறுவனின் அப்பா வீடு திரும்பும் வழியில் தானாக சொல்லிக் கொண்டார். ஜெராக்ஸ்கடைக்காரர் இறந்துவிட்டிருப்பது அவருக்கு தெரிந்திருந்தபோதும் உள்ளூர அது இன்னமும் முழுமையாக பதிவாகவில்லை. அந்த மனிதர் வேறெங்கோ உயிரோடிருப்பதாக மனம் சொன்னது. அவருடைய பிணம் ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதை சிறுவனின் அப்பா தன் கண்களால் பார்த்திருந்தார். எனினும் நிலம் சம்பந்தமாக அவர் பார்ட்டிகளை காண சென்றிருப்பதாக ஒரு கற்பனை ஓடியது. நிலத்தினடியில் துளி உப்பு கலக்காத ருசியான தண்ணீர் கொண்ட இடத்தை விற்கும் முயற்சியில் அவர் இருக்கக்கூடும். 

“பிள்ளைக்கு சுத்திப் போட்டு விபூதி அடிக்க வேணும்” என்று வீட்டில் இருக்கும் சிறுவனை நினைத்துக் கொண்டாள் அம்மா. போலீஸ் வருவதற்கு முன்னாலேயே வேறு வழியில் அவனை பத்திரமாக கொண்டு போய் அவள் வீட்டில் சேர்த்துவிட்டாள். அந்த சமயத்தில் சடசடவென்று அவள் மூளை செயல்பட்டது. ஜெராக்ஸ்கடைக்காரர் சாலையில் ஓடுவதை முதலில் பார்த்தது அவள்தான். வெட்டுப்பட்ட பகுதியை கையில் அழுத்தி பிடித்துக் கொண்டு மூச்சிரைக்க அவர் ஓடினார். பின்னால் ஆட்டோக்காரன் உட்பட ஐந்து பேர் கஞ்சா பித்தேறிய கண்களோடு துரத்தி வந்தார்கள். உடனேயே சிறுவனின் அம்மா தன் கணவரை இழுத்து பிடித்தாள். “நீங்கள் எங்கேயும் போகாதீர்கள்”. 

தொடர்ந்து, தன் மகன் எங்கே என்று அவள் தேடலானாள். அவன் உடனடியாக கண்களில் தட்டுப்படவில்லை. அந்த நேரம், சிறுவனை காணவில்லை என்றதும் அப்பா அம்மா இருவரையுமே கலவரம் பிடித்துக் கொண்டது. தொண்டை இடர அம்மாவுக்கு அழுகையே வந்துவிடும் போலானது. சிறுவன் எப்போது பார்வைக்கு வெளியே போனான் என்று தெரியவில்லை. தெருவை நீளவாக்கில் நோட்டம் விட்டபோது அவன் உருவம் தென்படவில்லை. மாயமானதுப் போல் காணாமல் ஆகியிருந்தான். அவர்கள் கலக்கத்தோடு படியிறங்கிய பொழுது எங்கிருந்தோ அவனே திரும்பி வந்தான். சேறொட்டிய கால்களோடு கடைக்கு வந்தவன் எதை பார்த்தான், எதை பார்த்தானில்லை என யாருக்கும் தெரியவில்லை. அவனை உள்ளேத் தள்ளி அப்பா கடையின் ஷட்டரை பாதி இழுத்து விட்டார். அம்மா தன் உடலுக்கு பின்னே அவனை தற்காத்து மறைத்தாள். அவன் கண்களையும் மூடினாள். கடையின் இருட்டுக்குள் சிறுவன் திமிறினான். பிறகு இயல்பாகி அசைவற்று நின்றான். கொலைகாரர்கள் ஸ்டேஷனரி கடையை விட்டு வெளியேறி ஓடியதும், சிறுனை கையோடு பிடித்துக் கொண்டு அம்மா விறுவிறுவென்று வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வீட்டில் சேர்த்ததும் அவனை காப்பாற்றிவிட்ட நிம்மதி அவளிடம் சேர்ந்தது. 

ஆனால் பாதி அடைத்த கடையில் அம்மாவின் அணைப்புக்குள் பாதுகாப்பாய் நின்றபோதும் சிறுவனின் கண்கள் முழுமையாக மூடியிருக்கவில்லை. இமைகளை அழுத்தாத விரலிடுக்குகள் வழியே அவனால் சாலையை காண முடிந்தது. அங்கே காலி மனையின் ஓரத்தில் நின்று காதறுந்த வெள்ளை நாய், பள்ளத்தில் வாய் வைத்து செம்மண் நீரை பருக, பக்கத்திலேயே சாலையில் மழை நீர் ரத்தத் துளிகளை கரைத்து ஓடிக் கொண்டிருந்தது. அதை அவன் பார்த்தான்.

0

நன்றி : காலச்சுவடு

No comments:

Post a Comment